Sunday, July 27, 2008

தொடர்கிறது...

மண்ணுக்கும்
விண்ணுக்குமான தொடர்புகள்
இன்னும் தொடர்கிறது...

காற்றுக்கும்
கடலுக்குமான தொடர்பில்
புயல் உருவாகிறது!

மலைக்கும்
அருவிக்குமான தொடர்பு
மழையில் வலுக்கிறது...

ஊருக்கும்
சேரிக்குமான தொடர்பு
முடிய மாட்டேன் என்கிறது...

பெண்ணுக்கும்
மண்ணுக்குமான சண்டை
இன்றுவரை நிகழ்கிறது!

தலைமுறைகள்
உறவுகளைத் தேடிட
குலதெய்வங்கள் வாழ்கிறது...

பண்பட ....

அவள் நாவிலிருந்து
வந்து விழும் எளிதான
வசைச் சொற்கள்
என் மரத்தின் ஆழத்தில்
ஆணி வேரையே
சாய்த்து விடுகிறது

காலம் கடந்து
கற்றுக் கொள்கிறேன்
இன்னொரு பாடம்
நிம்மதி தொலைந்து
புகலிடம் தேடி
ஓடி...ஓடி... அலைகிறேன்

புரிந்தவர்களின் அரவணைப்பும்
புரியாதோரின் அறிவுரையும்
பண்பட வைக்கிறது.

Sunday, April 6, 2008

விரிவுரையாளர்
சுருங்கச் சொன்னார்
பாடங்களை!

வகுப்பறையில்
அனுமதியின்றி நுழைந்தது
இடியோசை!

Sunday, March 9, 2008

பூமி...

பேராசை கொண்ட மாந்தன்
மரங்களை வெட்டினான்
காடுகள் அழிந்து போயின
விலங்குகள் ஊருக்குள்...
பறவைகள் புகலிடம் தேடி
பறந்து திரிகின்றன...
பலஅரிய உயிரினங்கள் இன்று
அழிந்து வருகின்றன...

காற்று நஞ்சாகிப் போனது
அறிவியல் வளர்ச்சியால் !
ஓசோனில் ஓட்டை விழுந்தது
நச்சுப் புகை சுழற்சியால்
நிலநடுக்கம்,சுனாமி,காட்டுத்தீ
காரணமென்ன தெரியுமா ?
தன்னலம் கொண்ட மாந்தனின்
தவறுதானென்று புரியுமா !

நாளைய தலைமுறை பற்றிய
கவலை கொள்...
அவர்கள் வாழ்ந்திட சூழலை
விட்டுச் செல்...
இன்றுநான் நாளை நீ மண்ணுக்குள்
என்பதை புரிந்துகொள்...
என்றும் அழியாதது பூமிதான்
தெரிந்துகொள்...

உயிர்கள் வாழ வளியை
கொடுக்கும் பூமி
அணுகுண்டு ஏவுகணைகளின் வலியை
தாங்கிடும் பூமி
பல்லாயிரம் உயிர் இனங்களை
கண்டதிந்த பூமி
பல கோடி ஆண்டுகள்
வாழுமிந்த பூமி...

Monday, March 3, 2008

மனக்கிடங்கு

சொல்ல முடியாத
வலிகள் நெஞ்சில்
புதைந்து கிடக்கின்றன
ஒவ்வொரு வீட்டிற்குள்ளும்...

முகம் கொடுத்துப் பேச
மறுக்கும் படியாக
மாறிப்போன
மனநிலையில் சிலர்...!

மீளமுடியாதளவுக்கு
குடும்ப வரலாற்றை
கொட்டித் தீர்க்கும்
வேதனையில் சிலர்...!

எதுவுமே நடக்காதது
போன்றதொரு மாயைகாட்டி
உள்ளுக்குள் புழுங்கும்
அறிவாளிகள் சிலர்...!

எப்படியோ ஒரு வகையில்
பாதுகாக்கின்றார்கள்....!
அவரவர்களுக்கான வேதனையை
மனக்கிடங்கில்...!

Sunday, February 24, 2008

அற்புத மலர்

காதலிப்பவர்கள்
மிகவும் கொடியவர்கள்...
பெற்றோர்களை மதிக்காத
பயங்கர தீவிரவாதிகள்...
இவர்களுக்கு தண்டனை
தற்கொலையன்றி வேறில்லை...
காதல் ஒரு பாவச்செயல்!

இந்து முன்னணியினரின்
எதிர்ப்புப் போராட்டம்
காவல் துறையினரின்
ஒடுக்கு முறைகள்
சாதி வெறியர்களின்
அடங்காத கோபத்தில்
காதல் ஒரு பாவச்செயல்!!

ஆண்டாண்டு காலமாய்
அனைத்தையும் தாண்டி
எங்கோ ஒரு மூளையில்
நாள்தோறும் அழகாய்
பூத்து விடுகின்றது பிறரறியாமல்
காதல் என்கிற அற்புதமலர்.

Tuesday, January 22, 2008

மழைக்காலம்!

மழைக்கால இரவொன்றில்
மாநகரின் நெரிசலில் தப்பி
அடுக்கத்தின் அறையொன்றில்
சொற்களைக் கோர்த்துக்
கொண்டிருந்தேன்...
அமைதியான சூழலில்
எஞ்சியிருந்த தாள்களில்
நனைந்த நினைவுகளைப்
பிழிந்தபடி!